தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையம் சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, தி.மு.க. துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு நெல்லை சென்ற அவருக்கு மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகரில் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., கிரகாம்பெல் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். நெல்லையில் சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு மொத்தம் ரூ.696 கோடியில் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவுக்காக சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது