தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை இன்று 21-ம் தேதி மாலை 04.00 மணியளவில், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் துணை முதல்வர் துவக்கி வைத்து சிறப்பித்திட அன்புடன் இசைந்துள்ளார். இந்த உணவுத் திருவிழாவில், 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

துவக்க நாளான இன்று மட்டும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி நடைபெறும். இந்த உணவுத் திருவிழாவில் மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனுமதி இலவசம். உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவிற்கு பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக வருகை தந்து, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சத்தான, சுவையான, ஆரோக்கியம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்திடவும், வாங்கிச் சென்றிடவும் அன்புடன் அழைக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.