விஜயமங்கலத்தில் த.வெ.க. மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். ஆனால் த.வெ.க. சார்பில் உணவு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அருகே உள்ள உணவகங்களில் தொண்டர்கள் சாப்பிட்டு வரும் நிலை ஏற்பட்டது. மேலும் அருகில் உள்ள கடைகளில் எல்லாம் உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க முதல் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் இந்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள் என பல்லாயிரம் பேர் காலை முதலே கூடினர். 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. வாகனங்களுக்காக 80 ஏக்கரில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் த.வெ.க.வில் சேர்ந்த செங்கோட்டையன் தனது பலத்தை காட்டும் வகையில் தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார். பொதுக்கூட்ட மைதானம் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் நடந்தது. 60 ஏக்கர் கார்களுக்கும், 20 ஏக்கர் இரு சக்கரவாகனங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு வருவோர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் நேற்று கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் அருகே உள்ள ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டனர். அப்போது உணவு பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருந்தது. அதன்படி ஒரு பொங்கல் ரூ. 100-க்கும், 2 இட்லி ரூ. 50, தோசை ஒன்றுக்கு ரூ. 60, காபி, டீ ரூ. 30 என விற்பனை செய்யப்பட்டதால் தொண்டர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்.