தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நாளை 23-ம்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இதனிடையே அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தி.மு.க. குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.