இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகியோர் நேற்று கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டு, வடம் பிடித்து இழுத்து தொடங்கி தேரோட்டத்தினை வைத்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கோயிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்திடும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலானது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் மார்கழி திருவிழா டிசம்பர் மாதம் 25-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று விநாயகர், சுவாமி, அம்மன் திருத்தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் த. மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தேரோட்டத்தினை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்த அளவில் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 300 திருக்கோயில்கள் திருப்பணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, இதுவரையில் 127 திருக்கோயில்கள் குடமுழுக்கு காணப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என். சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர். அழகுமீனா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் பி. கவிதா பிரியதர்சினி, ஏ. ஜான்சிராணி, உதவி ஆணையர் கே. தங்கம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.