தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காலை அக்கட்சியில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். இவர் ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

முன்னதாக, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவைக்கு சென்று சபாநாயகர் அப்பாவுவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று செய்திகள் வெளியாகின. எதிர்பார்த்தபடி, அவர் ராஜினாமாவுக்குப் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்துக்குச் சென்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தி.மு.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. செயல்பாடுகள் உகந்ததாக இல்லை. அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது. அ.தி.மு.க.வில் சேருமாறு தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்தது. நான் அங்கு தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்றாக சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அ.தி.மு.க.வுக்கு செல்லவில்லை. அதே போல், கூட்டணி தொடர்பான முடிவில் ஓ. பன்னீர் செல்வம் தாமதம் செய்ததால் தி.மு.க.வில் இணைந்துள்ளேன். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலினை மக்கள் போற்றுகிறார்கள். எல்லாருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்கள் மனதில் உள்ளார் ஸ்டாலின். அதனால் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்துள்ளது ஓ. பன்னீர் செல்வத்தின் அரசியலுக்கு நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்ட ஓ. பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களை ஒவ்வொருவராக இழந்து வருகிறார். அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க.வில் இணைந்தார், அதே போல் மருது அழகுராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.