தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து நேற்று தி.மு.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் குன்னம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது தி.மு.க. வேட்பாளராக இருந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம் 6,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அ.தி.மு.க.வில் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் அ.தி.மு.க உட்கட்சி மோதலால் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்துவரும் இவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ. பன்னீர் செல்வம் முடிவெடுப்பதில் தாமதம் செய்வதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.