திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான அமைப்பு மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழலை கருத்தில்கொண்டு மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க ஏரியின் கரைகள் இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி நவீன வலுபடுத்தப்பட்டுள்ளது. இப்பூங்காவில் அக்குபிரஷர் தன்மையுடைய நடைபாதை 2.00 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் அணுகக்கூடிய வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.