இன்னும் சில வாரங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவிருக்கும் நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி இறுதி வடிவம் பெறவுள்ளது.

சென்னை வரும் அமித்ஷா, அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், ஜான் பாண்டியன் மற்றும் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்ய உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் சில வாரங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாக இருக்கும் சூழலில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ்.ஐ.ஆர். பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர். அதேபோல் அ.தி.மு.க.வும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏப்ரல் மாதமே அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அதன்பின் அமித்ஷா தொடர்ச்சியாக தமிழகம் வந்த நிலையில், பீகார் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கினார்.

ஆனால் பீகார் தேர்தல் முடிவடைந்த பின், பா.ஜ.க.வின் பார்வை தமிழகம் நோக்கி திரும்பியது. கோவை வந்த பிரதமர் மோடி, பீகார் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ என்ற எண்ணம் தோன்றியதாக கூறினார். இந்த நிலையில் அமித்ஷா அடுத்தடுத்து பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகிறார். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த அமித்ஷா, நேற்று இரவு அண்ணாமலையை அழைத்து சந்திப்பு நடத்தினார். இந்த சூழலில் அமித்ஷா இன்னும் சில வாரங்களில் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வரும் அமித்ஷா, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இறுதி வடிவம் கொடுப்பார் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே பா.ஜ.க. தரப்பில் அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.