ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடி பொருட்கள் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழக இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் நிறுவனம், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவியுள்ள மின்னணு சாதனங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கைக்கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட கார்னிங் கொரில்லா கிளாஸ் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்ப்ராகாம் நிறுவனம், இந்தியாவில் கைபேசி உபபொருட்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.