திருச்சியில் கடந்த 2-ம் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். கடந்த 9-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வந்த வைகோவிற்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று முன்தினம் இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தார். அவரை புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் பயணத்தை முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து நேற்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை தொடங்கிய அவருக்கு மாட்டுத் தாவணியில் கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து நேற்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.