முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

100 நாட்கள் வேலை உத்தரவாதம் என்று சட்டம் இருந்தபோதே பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே வேலை கிடைத்தது. அதற்கான ஊதியத் தொகையையும் திட்டச் செலவையும் மாதக் கணக்கில் விடுவிக்காமல் வஞ்சித்தனர். அந்த நிலுவைத் தொகையையும் நாம் போராடிப் பெற வேண்டிய அவலம்தான் இருந்தது. தற்போது, மத்திய அரசின் விருப்பத்தின் பேரில் அதிகாரிகள் விரும்பினால் வேலை வழங்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்ட பிறகு, ஓரிரு நாட்கள் வேலை கிடைப்பதே அரிதாகப் போகிறது. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு பேரிழப்பைச் சந்திக்கப் போகிறது.

திட்டச் செலவில் 40 சதவீத தொகையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை, ஜிஎஸ்டி வரி மாற்றங்களுக்குப் பிறகு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில மாநில அரசுகளுக்குத் தரப்படும் சுமை; தண்டனை! கிராமப்புறப் பெண்கள், ஏழை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றி வந்த மகாத்மா காந்தி ஊரக திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்குத் பழனிசாமி வரவேற்புப் பத்திரம் வாசிப்பது மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம்! மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டெல்லியைக் குளிர்விக்க அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, அந்த திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரி பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தனது ஸ்டைலில் அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார். 125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்? மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, தொகுதி மறுவரையறை மூலமாகத் தமிழ்நாட்டின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழ்நாட்டுக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்து விட்டார் எதிர்க்கட்சித் தலைவர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.