தமிழகத்தின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அனைவரையும் உள்ளடக்கிய சீரான மற்றும் பரவலான வளர்ச்சி என்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் மின் மேலாண்மை தீர்வுகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. சுமார் 30 வருடங்களாக, தமிழகத்தில் செயல்பட்டு வரும் இக்குழுமம், தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஸ்மார்ட் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்தவும், ஓசூரில் ஒரு புதிய அதிநவீன உற்பத்தி ஆலை நிறுவவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம், ஏற்றுமதியை ஊக்குவித்து, உள்ளூர் உற்பத்தி மற்றும் வணிக வளர்ச்சியை வலுப்படுத்த ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தாரேஸ் அகமது, ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்தின் துணைத் தலைவர் அன்ஷும் ஜெயின், நிதி இயக்குநர் சுனில் சத்யப்ரகாஷ், சென்னை வளாகத்தின் தலைவர் விஸ்வநாதன் பொன்னுசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.