பீகார் தேர்தலில் ஓட்டுத் திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகளால் நிருபிக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஒரு புகார் கூட வரவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, தேர்தல் முடிந்த 7 நாட்களுக்குள் மின்னணு ஓட்டு இயந்திரத்தை சோதனை நடத்த கோரலாம். தேர்தலில் 2-ம் அல்லது 3-ம் இடம் பிடித்த வேட்பாளர்கள் இந்த சோதனையை கோர முடியும். பீகார் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த எந்த வேட்பாளரும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்ய கோரிக்கை வைக்கவில்லை.

அதே போல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் குறித்தும் எந்த விண்ணப்பமும் கிடைக்கப்பெறவில்லை. அதே போல, 2616 வேட்பாளர்களில் ஒருவர் கூட மறுதேர்தல் நடத்தக் கோரிக்கை விடுக்கவில்லை. ஒரு தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,215 வாக்குச்சாவடிகளில் விவிபேட் சீட்டுகளில் கட்டாய சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது. மின்னணு வாக்குச்சாவடியில் எந்த முரண்பாடும் கண்டறியப்படவில்லை.

தேர்தல் முடிந்த 5 தினங்களுக்குள் தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டு விட்டன. இதன்மூலம், வெளிப்படைத்தன்மை மற்றும் தேர்தல் தொடர்பான விபரங்களை அனைத்து தரப்பினருக்கும் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.