தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, தயாநிதி மாறன், வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன், டாக்டர் கனிமொழி, சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரெயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும்.
கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வேண்டும். கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன் வடிவுக்குக் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், கவர்னருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது.
கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி ரூ. 3548.22 கோடி சமக்ர சிக்சா நிதியை உடனே விடுவிக்க வேண்டும். இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.