தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரும் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். இதற்காக, அனுமதி கோரி முதல்வர் மற்றும் டி.ஜி.பியிடம் த.வெ.கவினர் மனு அளித்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 2026 ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார். அதனடிப்படையில் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த த.வெ.க. தலைவர் விஜய் முடிவு எடுத்தார். அதற்காக அனுமதி கேட்டு, அம்மாநில த.வெ.க. நிர்வாகி புதியவன் தலைமையில் த.வெ.க.வினர் புதுச்சேரி டி.ஜி.பி.யிடம் அண்மையில் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் 25 கி.மீ தூரம் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவித்து, புதுச்சேரி தலைமை செயலகத்திலும் த.வெ.க.வினர் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி மனு கொடுத்தனர். விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தரக்கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் டி.ஜி.பி.க்கு மனு அளித்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி விஜய்யின் ரோடு ஷோவுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து மக்கள் அதிகளவில் திரண்டால் கரூர் போன்ற அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி, தவெகவுக்கு புதுச்சேரி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.