100 நாட்கள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து எதிர்க்கட்சி அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் 100 நாட்கள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து எதிர்க்கட்சி அதிமுகவின் நிலைப்பாடு என்ன? 3 விவசாய சட்டங்கள், சி.ஏ.ஏ. போல இதிலும் அமித்ஷாவுக்கு ஆமாம் சாமி போட்டு ஆதரவு தரப்போகிறாரா பழனிசாமி?

100 நாட்கள் வேலைத் திட்டத்தில் காந்தியடிகளின் பெயரை அகற்றி விட்டு, சொன்னால் வாய் சுளுக்கிக் கொள்ளும்படி இந்தியில் பெயரிட்டிருக்கிறார்கள். இந்தித் திணிப்பை எதிர்த்து வென்ற அண்ணாதரை பெயரைக் கட்சியின் பெயரில் வைத்துக்கொண்டு, இதை எதிர்க்கக் கூடவா தயக்கம்? திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில், நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை அ.தி.மு.க. எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா?

ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? வறுமையை ஒழித்த சாதனைக்கு தண்டனையாக தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டமே நின்று போகும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம். இதற்கு, எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எதிர்க்கட்சித் தலைவர்? இவ்வளவு குனிந்து கும்பிடும் போடும் உங்களது கட்சிக்கு, அ.தி.மு.க.என்ற பெயர் எதற்கு? நான் கேட்கவில்லை, தமிழக மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.