அமெரிக்காவின் வலிமையை மீட்டுள்ளேன் என்றும் 8 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றும் அதிபர் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய உரையில் கூறியதாவது: பதினொரு மாதங்களுக்கு முன்பு நான் அதிபராக பொறுப்பேற்றபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருந்தது. விலைவாசி உச்சத்தில் இருந்தது. மொத்தத்தில் குழப்பமான நிலை இருந்தது. அதை சரிசெய்து வருகிறேன். அமெரிக்காவின் வலிமையை மீட்டிருக்கிறேன். 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தி உள்ளேன்.
ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தலை அழித்துள்ளேன். காசா போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளேன். அத்துடன் ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதியாக இருந்த மற்றும் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடலை மீட்க நடவடிக்கை எடுத்தேன். உலகெங்கிலும் இருந்து நம் நாட்டுக்குள் பலர் சட்டவிரோதமாக ஊடுருவினர். குறிப்பாக பைடன் ஆட்சியின்போது ஏராளமானோர் ஊடுருவினர். அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு மருத்துவம், கல்வி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், சட்டவிரோதமாக ஊடுருவிய அவர்களை அடையாளம் கண்டு திருப்பி அனுப்பி வருகிறேன்.
மேலும் வெளிநாட்டினரின் வருகையால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. அத்துடன் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன். ராணுவத்தில் பணிபுரியும் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸாக தலா 1,776 டாலர் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவி்ததார்.