சென்னை, அக். 18-
அதிமுகவின் 55 ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தொடக்க நாளை அதிமுக உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் இன்றும் அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகத்திற்கு வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் கையசைத்தபடி வந்த எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார். இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .
1972 ஆம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்ட நிலையில் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே புதுச்சேரியில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. 1977, 1980, 1984 என தமிழகத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்த ஒரே கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. அதேபோல் 1989இல் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆக ஜானகி பதவி ஏற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து மெஜாரிட்டியுடன் வென்ற பெண் முதல்வர் என்ற இடத்தை ஜெயலலிதா பெற்று இருந்தார். இதுவரை ஏழு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.