சென்னை பனையூர் த.வெ.க. அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் காரை வழிமறித்தார் அதிருப்தி பெண் நிர்வாகி அஜிதா. கையில் மனுவுடன் வந்த அந்த பெண் கண்ணீர் மல்க கேட்டும் விஜய் அவரிடம் என்ன பிரச்சினை என கேட்காதது வேதனையை ஏற்படுத்தியதாக அஜிதா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா. அவர் த.வெ.க. இணைந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என கேட்டு அவரும் அவரது ஆதரவாளர்களும் த.வெ.க. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் விடுபட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த காரை அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வழி மறித்தனர். அப்போது அஜிதா கையில் ஒரு மனுவை வைத்துக் கொண்டு சார் சார் என அழைத்தும் அவரது பிரச்சினை என்ன என விஜய் கேட்கவில்லை. மாறாக காரை லேசாக நகர்த்தியதால் சிலர் மீது இடித்தது. இதையடுத்து அஜிதாவையும் அவரது ஆதரவாளர்களையும் பவுன்சர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாம். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.