சென்னை, கலைவாணர் அரங்கில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இயங்கி வரும் திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தின் முப்பெரும் விழாவில், பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். வணிகர்களுக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. திராவிட இயக்கத்தின் தந்தையாக விளங்கும் தந்தை பெரியார் ஈரோட்டில் ஒரு வணிகர் குடும்பத்தில் பிறந்தவர்தான். பேரறிஞர் அண்ணா தி.மு.க.வைத் தொடங்கிய பிறகு, இந்த இயக்கம் வளர்ந்ததே கடைகளில்தான்.

தேநீர் கடை, மிதிவண்டி கடை, சலூன் கடை என பல்வேறு கடைகளில்தான் தி.மு.க வளர்ச்சி அடைந்தது. அக்காலத்தில் கடைகளில் அரசியல் பேசி வளர்ந்த இயக்கம் என்பதால்தான், தி.மு.க மீது வணிகர்களுக்கும், வணிகர்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எப்போதுமே தனிப்பாசம் உண்டு. அப்படிப்பட்ட உங்களுக்கு எல்லா வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும்.

ஆனால், இன்றைக்கு மத்திய அரசு உங்கள் வாழ்க்கையைச் சிரமப்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி-யைக் கொண்டு வந்து வாட்டி வதைக்கிறது. ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசும், நம் முதல்வரும் வணிகர்களின் நலனைப் பேணிக் காக்கின்ற அரசாக, பேணிக் காக்கின்ற முதல்வராக சிறப்பாகச் செயல்படுகிறார். வியாபாரிகளின் நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றக்கூடிய வகையில் திராவிட மாடல் அரசு என்றைக்கும் வணிகர்களின் தோழனாக, பாதுகாவலனாக இருக்கும். உங்களுடைய ஆதரவை எப்போதும் போலத் தொடர்ந்து நம் திராவிட மாடல் அரசுக்கும், நம் முதல்வருக்கும் வழங்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.