வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று 30-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதுரையில் அழகர்கோயில், கூடலழகர் பெருமாள் கோயில் மற்றும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்றவையாக உள்ளன. இந்த கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 20-ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று 30-ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது வழித்துணைப் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பகல் பத்து உற்​சவம் நடை​பெற்று வரு​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சொர்க்​க​வாசல் எனப்​படும் பரமப​த​வாசல் திறப்பு இன்று அதி​காலை நடை​பெற உள்​ளது. இதற்​காக உற்​சவர் நம்​பெரு​மாள் இன்று அதி​காலை 4.30 மணி​யள​வில் ரத்​தின அங்​கி, பாண்​டியன் கொண்​டை, கிளி​மாலை உள்​ளிட்ட திரு​வாபரணங்​கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்​பட்டு வெளி​யில் வரு​வார். இரண்​டாம் பிர​காரம் வலம் வந்து நாழிகேட்​டான் வாயில் வழியே மூன்​றாம் பிர​காரத்​துக்கு வரும் நம்​பெரு​மாள், துரைப்​பிரதட்​சணம் வழி​யாக பரமப​த​வாசல் பகு​திக்கு வரு​வார்.

அதி​காலை 5.45 மணி​யள​வில் பரமப​த​வாசல் திறக்​கப்​படும். அப்​போது நம்​பெரு​மாள் பக்​தர்​கள் புடைசூழ பரமப​த​வாசலைக் கடந்​து, மணல்​வெளி, நடைபந்​தல் வழி​யாக ஆயிரங்​கால் மண்​டபத்​தின் எதிரில் உள்ள திருக்​கொட்​டகைக்கு வரு​வார். அங்கு ஒரு மணி நேரம் பக்​தர்​களுக்கு சேவை சாதிப்​பார். பின்​னர் சாதரா மரி​யாதை​யாகி, ஆயிரங்​கால் மண்​டபத்​தில் உள்ள திரு​மாமணி மண்​டபத்​தில் எழுந்​தருளி நள்​ளிரவு வரை பக்​தர்​களுக்கு சேவை சாதிப்​பார். நள்​ளிரவு 12 மணி​யள​வில் அங்​கிருந்து புறப்​பட்டு மூலஸ்​தானம் சேரு​வார்.

விழாவையொட்டி ஸ்ரீரங்கம் மற்​றும் சுற்​றுப் பகு​தி​கள் விழாக்​கோலம் பூண்​டுள்​ளன. ஸ்ரீரங்கம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். விழா ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் தலை​மை​யில், பட்​டர்​கள், ஸ்தானீகர்​கள், கைங்​கர்​யபரர்​கள், அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் மற்​றும் உபய​தா​ரர்​கள் உள்​ளிட்​டோர் செய்​துள்​ளனர். இதே போல் தமிழகம் முழுவதும் பெருமாள் வீற்றிருக்கும் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு இன்று நடைபெறுகிறது.