வடகொரியாவில் அதிபர் கிம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமீபகாலமாக அவரது மகள் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில் அதிபர் கிம், தனது மகளை வடகொரியாவின் முன்னோர்களின் கல்லறைக்கு அழைத்து சென்றிருக்கிறார். இந்த செயல், அரசனின் அரியணைக்கு பக்கத்தில் இன்னொரு இருக்கை போட்டு அமர வைப்பதற்கு சமமாகும்.
அதாவது வட கொரியாவில் முன்னோர்களின் கல்லறைகள் புனிதமான கோயில்களை போன்றதாகும். அதிபர் இந்த கல்லறைக்கு வருகிறார் எனில், மொத்த ராணுவ தளபதிகளும் இங்குதான் இருப்பார்கள். அப்படியான இடத்திற்கு தனது மகளை கிம் முதன் முறையாக தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறார். இதன் மூலம், தனக்கு பிறகு வடகொரிய ராணுவம் தனது மகளுக்குதான் கட்டுப்பட வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்லாது, ஏவுகணை சோதனைகள், புத்தாண்டு கொண்டாட்டம், ராணுவ அணிவகுப்புகளிலும் கிம்மின் மகள் பங்கேற்று வருகிறார். இவை அனைத்தும் வடகொரிய அரசியலின் முக்கிய நகர்வாக இருக்கிறது. விரைவில் கிம் ஜு ஏ வடகொரியாவின் 4-வது தலைவராக உருவெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.