ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

டிரம்பின் இந்த கருத்துக்கு ஈரான் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறுகையில், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டால், அது பிராந்திய அளவில் குழப்பத்தை விளைவிக்கும். அமெரிக்க நலன்கள் சிதைக்கப்படும். டிரம்ப் ஆபத்தான விளையாட்டை தொடங்கியுள்ளார். அமெரிக்க மக்கள் தங்கள் வீரர்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என சாடினார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறுகையில், அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த 2025 ஜூனில், ஈரானின் அணு மின்சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.