இந்தியாவை பிரிவினைவாதிகளைக் கொண்டு துண்டாக்குவோம் என்று வங்கதேச அரசியல் கட்சி தலைவர் பேசியது தொடர்பாக எச்சரிக்கை செய்வதற்கு, அந்நாட்டு தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததில் இருந்து, அந்நாட்டுடன் இந்தியாவுக்கான சுமூக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, இந்தியாவை பல வழிகளில் வங்கதேசம் கோரிக்கையாகவும், மறைமுக மிரட்டலாகவும் விடுத்து வருகிறது. இதனால், இருநாடுகளிடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், கடந்த 15-ம் தேதி டாக்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நேஷனல் சிட்டிசன் கட்சி தலைவர் ஹஷ்நத் அப்துல்லா, பிரிவினைவாத மற்றும் இந்தியா எதிர்ப்பு சக்திகளுக்கு தங்குமிடம் அளிப்போம். அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை இந்தியாவிலிருந்து துண்டிக்க வங்கதேசம் உதவும். இந்தியாவின் இறையாண்மை, மனித உரிமைகளை மதிக்காத சக்திகளுக்கு (ஷேக் ஹசீனா) இந்தியா தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் அதற்குப் பதிலடி கொடுக்கும்,' எனக் கூறினார்.

அவரது இந்தப் பேச்சை கரகோஷமிட்டு, அங்கிருந்தவர்கள் வரவேற்றனர். அவரது இந்தப் பேச்சுக்கு அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது; இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு. அணு ஆயுதங்களைக் கொண்ட நாடு மற்றும் உலகின் 4வது பெரிய பொருளாதாரம் உடையது. அப்படியிருக்கையில், வங்கதேசத்தால் அதை எப்படி யோசிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அரசியல் தலைவர் ஒருவர் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் கேட்டு, வங்கதேச தூதர் முகமது முஸ்தாபிஸூருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.