ஈரோடு, அக். 18-

ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள புதிய ரயில்வே நுழைவு பாலத்தில், மழை பெய்யும் போது பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதை தவிர்க்க பாலத்தின் இருபக்கமும் மேற்கூரை அமைக்கும் பணியை தொடங்கினர். இதனால் நுழைவுப்பாலத்தில் தண்ணீர் தேங்காது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் தற்போது வரை பாலத்தின் ஒருபக்கம் மட்டுமே முழுமையாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் மெத்தனத்தால் மறுபக்கம் கூரை அமைக்க முடியவில்லை. ஆனால் இயற்கை காத்திருக்குமா? வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் நாளே வெளுத்து வாங்கியதால், வழக்கம்போல் பல அடி உயரத்துக்கு நுழைவுப்பாலத்தில் தண்ணீர் தேங்கியது. ஆழம் தெரியாமல் சென்ற பல இலகு ரக வாகனங்கள், டூவலர்கள் ஆபாகி நின்றன. வழக்கம்போல் மாற்றுப்பாதை மூலம், பல கி.மீ., சுற்றிக்கொண்டு வாகன ஓட்டிகள் சென்றனர். ரயில்வே நிர்வாகம் மெத்தனத்தை உதறி, மறுபக்கமும் விரைந்து மேற்கூரை அமைத்து, பிரச்னைக்கு தீர்வு காண, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.