கடமலைக்குண்டு, அக். 18-
வருஷநாடு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கோடை மழை, தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் கடந்த சில மாதங்களாக மூல வைகை ஆறு வறண்டு கிடந்தது. இதனால் மூல வைகை ஆற்றில் இருந்த உறை கிணறுகள் ஆற்றின் கரையோர விவசாய நிலங்களில் இருந்த விவசாய கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு குறைந்தது. பல கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் வருஷநாடு மலைப்பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மழைக்குப்பின் சாரல் நீடித்தது. மலைப்பகுதியில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. வருஷநாடு வரை உள்ள மூல வைகை ஆற்றில் பாறைகள் அதிகம் இருப்பதால் ஆற்றில் சென்ற நீர் எளிதில் வருஷநாடு சென்று சேர்ந்தது. வருஷநாட்டில் இருந்து கண்டமனூர் வரை மூல வைகை ஆற்றில் மணல் பரப்பு அதிகம் உள்ளது. இதனால் மூல வைகை ஆற்று நீர் வைகை அணைக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்படும். தொடர்ச்சியான மழை இருந்தால் மட்டுமே மூல வைகை ஆற்று நீர் வைகை அணை சென்று சேரும் வாய்ப்புள்ளது.