சென்னை, அக். 16-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை (16.10.2026) கோவையில், சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
அதாவது, ரூ.300 கோடி மதிப்பிலான பெரியார் அறிவுலகம் மற்றும் நூலகத்தைத் திறந்து வைக்க உள்ளார். அதோடு, ரூ.200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்களைப் பொது
மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காகத் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் கோவை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக, காந்திபுரம் பகுதியில் விழா நடைபெற உள்ள இடத்திற்குச் செல்கிறார். அங்கு மதியம் ஒரு மணி வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, அவினாசி சாலையில் உள்ள காவல் பயிற்சி மைதானத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குச் செல்வதற்கான ஏற்பாடு
களை காவல்துறையினரும் அதிகாரிகளும் செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய் திருச்சூருக்குச் செல்வதற்கான காரணம் குறித்த தகவல்களை அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் அவர் குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக முதலமைச்சர் கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 2 மணிக்குச் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்குச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் திருச்சூரில் நாளை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தனது பயணத்தை முடித்து
க்கொண்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.