சென்னை, அக். 18-
தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘’ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மாநகரம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மழைநீர் வடிகால் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 4000 கோடி ரூபாய் பணம் எங்கே சென்றது, எதற்காகச் செலவிடப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், பருவமழை வரும் என்று தெரிந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. மழை பாதிப்பு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளைப் பேசினால் சட்டமன்ற உறுப்பினர்கள் ‘போர் அடிக்கிறது’ என்று அலட்சியமாகக் கூறுவதைக் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். கொசுத்தொல்லை, விலைவாசி உயர்வு மற்றும் டெங்கு பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும். அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுகிறது. நான்கு மாதக் குறுகிய காலத்திற்குள் உங்களால் இரண்டு இடைத்தேர்தல்களை திட்டமிட்டு நடத்த முடிகிறது, ஆனால் ஏன் மக்களின் அத்தியாவசியப் பணிகளைச் செய்ய முடியவில்லை. இடைத்தேர்தல்களில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துவதால் மக்களின் மீதான கவனம் திசை திருப்பப்படுகிறது. அரசியல்வாதிகளின் செயல்பாடுகளால் “குதிரை விலை” என்ற பழமொழி மாறி இன்று பொதுமக்கள் “எம்எல்ஏ விலை” என்று பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. அதேநேரம், காங்கிரஸ் முதலமைச்சர்கள் காவிரித் தண்ணீரைக் கொடுக்க மறுக்கும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாரதப் பிரதமரின் வழிகாட்டுதலோடு கோதாவரியில் இருந்து 3 டிஎம்சி குடிதண்ணீர் தருவதாகக் கூறியுள்ளார். இந்த மழைத் தண்ணீரைப் பாதுகாப்பாக சேமிக்கத் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.