சென்னை, அக். 18-
தமிழ்நாட்டில் சன்னரக அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யப்படு
வதாக வியாபாரிகள் தெரி
விக்கின்றனர்.
எல் நினோ தாக்கம், பருவமழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சன்னரக அரிசி தமிழகத்தில் போதிய அளவில் சாகுபடி செய்யப்படாததால், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் வரத்து குறையத் தொடங்கியுள்ளதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திரா, கர்நாடகாவிலும், நெல் சாகுபடி குறைந்துள்ளதால், தமிழ்நாட்டுக்கு வரும் அரிசியின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, தஞ்சாவூரில் அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மைசூர் பொன்னி அரிசி, தற்போது 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி, 60 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேபோல், கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சீரக சம்பா அரிசி 210 ரூபாயாகவும், நாட்டு பொன்னி அரிசி 70 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விலையேற்றம் இருப்பதால் நிரந்தர விலை இல்லாமல் அரிசி விற்பனை செய்ய
ப்படுவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, பருப்பு வகைகள், மசாலா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள், இதனை கட்டுப்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.