மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் ஆவின் சந்திப்பு, மேலமடை வழியாகச் சிவகங்கை ரிங் ரோடு சந்திப்பு வரை செல்லும் சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக இருந்தது. மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்துப் பகுதிகளின் ஒன்றான மேலமடைச் சந்திப்பில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாலத்திற்குத் தமிழினத்தின் பெருமைமிகு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதல் ஆவின் சந்திப்பு, மேலமடை வழியாகச் சிவகங்கை ரிங் ரோடு சந்திப்பு வரை செல்லும் சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக இருந்தது. இதற்குத் தீர்வுகாணும் வகையில், தி.மு.க. ஆட்சியில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பாலம், மிகவும் நவீன தொழில்நுட்பமான ஒற்றைத் தூண் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். ஆவின் பார்லர் கட்டிடத்தில் தொடங்கி கோமதிபுரம் 5-வது வீதி வரை இருவழிப் பாதையாக இந்த மேம்பாலம் நீள்கிறது. மேலும், பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் எளிதில் செல்ல அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் திறக்கப்படுவதால், மதுரை நகரின் அண்ணாநகர், கே.கே.நகர், மாட்டுத்தாவணி, மேலமடை, கோமதிபுரம் போன்ற முக்கியப் பகுதிகளில் இனி போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, இராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வெளியூர் பேருந்துகள் இனி சிக்னல்களில் காத்திருக்க வேண்டியதில்லை. அவை நேரடியாக மேம்பாலம் வழியாகப் பயணித்து நேரத்தைச் சேமிக்கலாம்.
நகருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இனிமேல் நெரிசலின்றிச் செல்ல வழி பிறந்துள்ளது. தமிழினத்தின் வீரத்துக்கு அடையாளமான ராணி வேலுநாச்சியாரின் பெயருடன் நாளை இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதால், மதுரை மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். விழாவுக்காகப் பாலம் முழுவதும் தயார் நிலையில் உள்ளது.