சென்னையில் வரும் 19-ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த இலவச லேப்டாப் திட்டத்தின் கீழ் 10 லட்சம் பேருக்கு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கொடுத்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால் 2018-ம் ஆண்டு நிதி பிரச்சனை காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், தற்போது விலையில்லா லேப்டாப் வழங்க முடிவு எடுக்கப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது, நடப்பாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்காக தமிழக அரசு தரப்பில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கப்படும் என்று கூறிய தங்கம் தென்னரசு, ஒரு லேப்டாப்பின் மதிப்பு ரூ.20 ஆயிரமாக இருக்கும் என்றும் கூறினார்.

இதையடுத்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்தவற்கான டெண்டர் பணிகளை தமிழக அரசு தொடங்கியது. இதையடுத்து டெண்டர் இறுதி செய்யப்பட்டு, இந்த 3 நிறுவனங்களுக்கும் லேப்டாப் வழங்க ஆணையிடப்பட்டது. இருந்தாலும் கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பதே பலரின் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் வரும் 19-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கல்லூரி மாணவர்களுக்கான விலையில்லா கணினி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.