அவனியாபுரம், அக். 7-
மதுரை மாநகராட்சி 90 வது வார்டு வில்லாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு ரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் பொதுமக்களும், 100வது வார்டில் மூன்று மாதங்களாக தண்ணீர் வராததை கண்டித்து பா.ஜ., வினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
90 வது வார்டில் (வில்லாபுரம்) துளசிராம் தெரு, பசும்பொன் குறுக்கு தெரு, கவி விநாயகர் கோயில் தெரு, சித்தி விநாயகர் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் சாலை, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், மழைக்காலங்களில் சாலைகளை கடக்கும் முதியோர், பள்ளிச் சிறுவர்கள் பாதிப்பதாகவும், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் மழை நீர், கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் ரோட்டில் தேங்கிய நீரில் நாற்று நட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
100வது வார்டு அவனியாபுரம் அருணகிரி நாதர் கோவில் தெருவில் அடிப்படைத் தேவைக்காக ஆழ்குழாய் அமைத்து, மின்மோட்டார் மூலம் தண்ணீர் சப்ளை செய்தனர். அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீரை பயன்படுத்தினர்.
மூன்று மாதங்களுக்கு
முன் மோட்டார் பழுதாகி தண்ணீர் சப்ளை பாதித்தது. இதனால் சிரமம் அடைவதாகக் கூறி பா.ஜ., மற்றும் பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.