மதுரையில் ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்ட வளாகம் திறக்கப்பட உள்ள நிலையில், தி.மு.க. டிசம்பர் மாதத்திலேயே பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட தயாராகி விட்டது. வரும் 7-ம் தேதி அப்போலோ மேம்பாலம் திறப்புக்காக மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், அத்துடன் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் நடத்த முடிவு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் வெற்றியை பெற வேண்டும் என்பதில் தி.மு.க. குறியாக இருக்கிறது. குறைந்தபட்சம் கடந்த முறை அளவிற்கான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது. அதனால் மதுரைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மதுரைக்கு திமுக ஆட்சியில் கீழடி அருங்காட்சியகம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் வேகம் எடுத்திருக்கின்றன. இதனிடையே கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகிய 2 மேம்பால பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தேர்தலையொட்டி இன்னும் சில அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகம் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. பொங்கலையொட்டி பிரதமர் மோடி மதுரைக்கு வந்து திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பதற்கு முன்பாகவே மதுரைக்கு இன்னும் சில அறிவிப்புகளை தி.மு.க. இந்த ஆட்சியில் வெளியிட உள்ளது. வரும் 7-ம் தேதி அப்போலோ மருத்துவமனை மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வரவுள்ளார். அன்றைய நாளிலேயே மதுரையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது.