2025-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய அரசு சார்பில் டுவிட்டர் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதனை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,

வாழ்க்கையை எளிதாக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இனி வரும் காலங்களில் எங்கள் சீர்திருத்தப் பயணம் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

சீர்திருத்தத்தின் உண்மையான பயன், அது மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறதா என்பதில்தான் உள்ளது. 2025-ம் ஆண்டு நிர்வாகத்தில் ஒரு தெளிவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளை மையமாகக் கொள்ளாமல், விளைவுகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எளிமையான வரிச் சட்டங்கள், நவீன தொழிலாளர் சட்டங்கள் மற்றும் இணக்க நடைமுறைகள் ஆகியவை குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடையே இருந்த தடைகளைக் குறைத்தன.

நம்பிக்கை, கணிப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. நன்கு வடிவமைக்கப்பட்ட கொள்கைகள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வரிச் சலுகை கிடைத்துள்ளது. ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை. நடுத்தர குடும்பங்கள் இப்போது தாங்கள் சம்பாதிப்பதில் அதிக பணத்தை தங்கள் கையில் வைத்திருக்க முடிகிறது. இது அவர்களுக்கு அதிக நம்பிக்கையுடன் செலவு செய்யவும், சேமிக்கவும் மற்றும் முதலீடு செய்யவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

சீராக்கப்பட்ட வரி அடுக்குகள், எளிதான பதிவு நடைமுறைகள், தானியங்கி செயல்முறைகள் மற்றும் விரைவான பணப்பரிமாற்றங்கள் ஆகியவற்றுடன், அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் மூலம் வணிகம் எளிதாகி உள்ளது. 6.05 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான தீபாவளி விற்பனை மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நடைபெற்ற நவராத்திரி விற்பனை மூலம் இதன் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.