தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய உணவகங்களில் சமைக்கப்படும் எவ்வளவு உயர்ந்த விலையிலான உணவு என்றாலும், வீட்டில் பெண்களின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு ருசியிலும், தரத்திலும் ஈடுசெய்ய முடியாது.

அத்தகைய பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழு மகளிர் தயாரிக்கும் உணவுகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற உணவுத் திருவிழாக்களுக்கு பொதுமக்கள் தந்த அபரிமிதமான ஆதரவைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் , 21.12.20 அன்று சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மதி உணவுத் திருவிழாவினைத் தொடக்கி வைத்தார். மதி உணவுத் திருவிழாவில், சென்னை தெரு உணவு, செங்கல்பட்டு காய்கறி தோசை, கோயம்புத்தூர் கொங்கு மட்டன் பிரியாணி, கடலூர் மீன் புட்டு, காஞ்சிபுரம் கோவில் இட்லி, கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, மதுரை கறி தோசை, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், நீலகிரி கோத்தர் உணவு, ராமநாதபுரம் மீன் உணவுகள், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சேலம் தட்டு வடை செட், தஞ்சாவூர் மட்டன் உணவுகள், திருவள்ளூர் நெய்தல் உணவுகள், தூத்துக்குடி இலங்கை யாழ் உணவுகள், திருநெல்வேலி நரிப்பயிறு பால், திருப்பத்தூர் ஆம்பூர் பிரியாணி, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், திருச்சி வரகு மட்டன் பிரியாணி, திருவாரூர் பனை உணவுகள், விழுப்புரம் சிறுதானிய சிறப்பு உணவுகள், விருதுநகர் புரோட்டா, சாத்தூர் சேவு உள்ளிட்ட 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.