பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவை முக்கிய இடம் பிடிக்கக்கூடிய ஆகும்.

இதில் மங்கலப் பொருளாக விளங்கும் மஞ்சள் கிழங்கின் வாசனை, வீடு முழுவதும் மனம் வீசும் வகையிலும், பொங்கல் பானையை அலங்கரிக்கவும், பூஜையில் வைத்து வழிபடவும் மஞ்சள் கொத்து செடிகள் பயன்படுகின்றன. இதற்கென விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டு, சின்னக்கள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இவை தற்போது நன்கு செழித்து வளர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் மஞ்சள் உள்ளது. இந்த ஆண்டு பெய்த மழையினால் மஞ்சள் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஞ்சள் கொத்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மஞ்சள் கொத்து செடிகளின் விலையை சற்று உயர்த்தி விற்பனை செய்தால் மட்டுமே மழையினால் ஏற்பட்ட இழப்புக்கு ஓரளவு ஈடுகட்ட முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.