வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 30-ம் தேதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் உப கோவிலான தெய்வநாயக பெருமாள் கோவில் கொந்தகையில் அமைந்துள்ளது. தற்போது அங்கு கும்பாபிஷேக விழாவிற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவீதி புறப்பாடுகள் நடைபெறாது. ஆனால் அன்றைய தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் பரமபத வாசல் திறப்பு மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் அழகர்கோவில், கூடலழகர் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது வழித்துணை பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவையொட்டி தினமும் 7 மணிக்கு ராப்பத்து நிகழ்ச்சி நடைபெறும். அதே போல மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிகாலை முதல் பக்தர்கள் வழிபடுவர் என்பதால் சிறப்பான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.