அ.தி.மு.க. மூத்த நிர்வாகியாக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா போன்றவர்களை ராமநாதபுரம் பசும்பொன்னில் சந்தித்து பேசினார். இதன் காரணமாக செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்து அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். விஜயும் அவரை அரவணைத்து செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார். த.வெ.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் என 2 பதவிகளை விஜய் வழங்கி கவுரவித்தார்.
கட்சியில் சேர்ந்த உடன் செங்கோட்டையன் தனது சொந்த ஊரான ஈரோட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை விஜய் தலைமையில் நடத்தினார். இதில் பங்கேற்ற விஜய் பேசுகையில் அண்ணன் செங்கோட்டையன் நம்ம கூட வந்து சேர்ந்தது நமக்கு மிகப்பெரிய பலம். அவரை மாதிரி இன்னும் நிறையபேர் வந்து சேர இருக்கிறார்கள். அவங்க எல்லோருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம் என்றார்.
விஜய்யின் இந்த பேச்சால் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்கு பிறகு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் த.வெ.க.வில் சேர வாய்ப்புள்ளது. அவர்கள் எந்த கட்சியில் இருந்து வர உள்ளனர், அவர்கள் யார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது. அதனை அறிய த.வெ.க.வினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.