திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த பூரண சந்திரன் உடல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கூடிய பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று முன்தினம் மதுரை தல்லாங்குளம் அவுட் போஸ்ட் பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்தில் இளைஞர் பூர்ண சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பூரணசந்திரனின் உடலை அரசு மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த உடற்கூராய்வு 10.15 மணிக்கு முடிந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முயற்சித்தனர். அப்போது அங்கு திரண்ட பா.ஜ.க, இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றிலும் சுமார் 500 போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். அதே போல் பா.ஜ.க.வின் மற்றொரு தரப்பினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர். பின்னர் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு திரண்ட அவர்கள், பூரணசந்திரனுக்கு வீரவணக்கம், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் என கோஷங்களை எழுப்பினர்.