மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார். நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.
ஸ்ரீனிவாசனின் மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், எனது நல்ல நண்பர் ஸ்ரீனிவாசன் இனி இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியாக இருந்தது. நான் படித்த திரைப்படக் கல்லூரியில் அவர் என் வகுப்புத் தோழர். அவர் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.