பா.ம.க தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் அளித்த மனுவை, தலைமை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. அதே நேரம், பா.ம.க., தலைவராக, வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதனால், பா.ம.க., பெயர், கொடி, சின்னம் ஆகியவை, அன்புமணி தலைமையிலான கட்சிக்கு சொந்தமாகியுள்ளன.
இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருதரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. அதை தொடர்ந்து ஏ.பி. படிவங்களில் இருதரப்பும் கையெழுத்திட்டால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும்? தேர்தலின்போது வேட்பாளர்களை அங்கீகரித்து யார் கையெழுத்துடுவதை தேர்தல் ஆணையம் ஏற்கும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும் அனுமதிப்பதிலுமே உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது. அங்கீகரிக்கபடாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பா.ம.க. உரிமை கோரல் விவகாரத்தில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். போலி ஆவணம் அளித்து பாமகவை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.