வரும் தேர்தலில் பா.ஜ.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடருவது பற்றி பேச வந்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவரிடம் முதல்வர் ரங்கசாமி, இது மார்கழி மாதம், தை மாதம் பேசிக்கலாம் என்று கூறி திருப்பி அனுப்பியது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதனை முதல்வர் ரங்கசாமி இதுவரை வெளிப்படையாக அறவிக்கவில்லை. தேர்தல் வரும் போது சொல்கிறேன் என கூறி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் புதுச்சேரி மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்த போது, ரங்கசாமி அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, உங்கள் வழியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியதாக தெரிகிறது.
இந்த சூழலில், ரங்கசாமியை சமாதானம் செய்ய புதுச்சேரி வந்த பா.ஜ.க தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க கோரிமேடு அப்பா பைத்தியம்சாமி கோயில் வளாகத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்றனர். அப்போது அவர்களை வரவேற்ற ரங்கசாமி, தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு அழைத்து சென்று பூஜை செய்து விபூதி, எலுமிச்சம் பழம், பூக்களை கொடுத்தார்.
இதன் பின் முதல்வர் ரங்கசாமி வீட்டில் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் என்.ஆர்.காங் கூட்டணி தொடர வேண்டும் என மேலிட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு ரங்கசாமி, இது மார்கழி மாதம், தைமாதம் பேசிக்கலாம் என தெரிவித்ததோடு, அனைவருக்கும் மகளிர் உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட சில அரசியல் நிகழ்வுகளை சுட்டிகாட்டி நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்வது குறித்து ரங்கசாமி நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பலான பதிலையே பா.ஜ.க.விடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.