சென்னையில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்தை தான் அன்றாடம் பயன்படுத்துகின்றனர். அதன்படி தினமும் அரசு மாநகர பஸ்களில் 35 லட்சம் பேரும், மின்சார ரெயில்களில் 12 லட்சம் பேரும், மெட்ரோ ரெயிலில் 3 லட்சம் பேரும் பயணிக்கின்றனர். மக்களின், இந்த பயணத்தை எளிதாக்க அரசு பல்வேறு வழிகளில் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது.
அனைத்து பொது போக்குவரத்துக்கும் ஒரே செயலியில் டிக்கெட் பெறும் வசதியை தமிழக அரசின், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பான கும்டா தொடங்கி உள்ளது. அதற்காக வடிவமைக்கப்பட்ட சென்னை ஒன் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இந்த செயலி, பொது போக்குவரத்துக்கு வெறும் டிக்கெட் எடுப்பதற்காக மட்டுமல்லாமல் மக்களின் பயணத்தை எளிதாக வகுத்து கொடுத்து இருக்கிறது. இத்திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சம் பேர் சென்னை ஒன் செயலியை பதிவிறக்கம் செய்தனர். பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு செல்ல வாடகை கார் மற்றும் ஆட்டோக்களும் இந்த செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பல செயலிகளைப் பயன்படுத்தும் சிரமத்தைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறுவதால் பயணிகள் இதனைப் பாராட்டுகின்றனர். சென்னை ஒன் செயலி, சென்னையின் பொதுப் போக்குவரத்தை எளிமையாகவும், விரைவாகவும், திறமையாகவும் பயன்படுத்த உதவும் ஒரு புரட்சிகரமான செயலியாகும்.