ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு (2026) உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இன்று (புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும். புத்தாண்டுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.