தொடர்ந்து 3-வது நாளாக தனியார் விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இதுவரையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவை ரத்தாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை சேர்ந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது இண்டிகோ. இருப்பினும் அண்மை காலமாக விமான புறப்பாட்டில் தாமதம், விமான சேவை ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்சினைகளை இண்டிகோ நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது. நேற்று காலை மட்டுமே மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் என நாடு முழுவதும் சுமார் 400 இண்டிகோ விமான சேவைகள் ரத்து ஆகியுள்ளன. இதில் மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் மட்டும் தலா 100 இண்டிகோ விமான சேவைகள் நேற்று ரத்தாகி உள்ளது.
மேலும், இந்த விமான நிலையங்களில் விமானங்களை நிறுத்தும் இடத்தில் இண்டிகோ விமானங்கள் நிற்கின்ற காரணத்தால் சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் இருந்து பிற விமான சேவை நிறுவனங்களின் புறப்பாடு மற்றும் வருகையிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இண்டிகோ விமான குழுவினர் பணியில் இல்லாதது இதற்கு காரணம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் தங்களது பயணம் ரத்தானதை அறிந்த பயணிகள் விமான நிலையங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.