எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிப்பது என அ.தி.மு.க.விற்குள் பலர் வேலை பார்த்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவச் சிலை திறக்கும் நிகழ்ச்சி, அமைச்சர் எ.வ.வேலு, எம்.பி தரணிவேந்தன் ஆகியோர் தலைமையில் ஆரணியில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதி உருவச் சிலையை திறந்து வைத்து பேசியதாவது,

அ.தி.மு.க.வை யார் கைப்பற்றுவது என்பது அவர்களுக்குள்ளேயே போட்டியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிப்பது என்று அ.தி.மு.க. அணிக்குள்ளேயே வேலை பார்த்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.விற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவின் காலடியில் யார் முதலில் விழுவது என்று அ.தி.மு.க. அணிக்குள் மிகப்பெரிய போட்டியே நிலவி வருகிறது.

பா.ஜ.க.வையும், அ.தி.மு.க.வையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வெறுப்பு அரசியல் மட்டுமே செய்யும் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைந்து 8 மாதமான நிலையில், அந்த கூட்டணியை நம்பி இதுவரை எந்த கட்சியும் போகவில்லை. அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் விலகி ஓடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பிரச்சாரத்திற்கு செல்வதாக கூறி பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார். ஒவ்வொரு தொகுதியாகச் சென்று பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தேனி பக்கம் சென்றால் ஓ.பன்னீர்செல்வம் திட்டுவார், கோபிசெட்டிபாளையம் சென்றால் செங்கோட்டையன் திட்டுவார், டெல்டா மாவட்டம் சென்றால் டிடிவி தினகரன் திட்டுவார் என்றே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.