தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென டெல்லிக்கு பயணம் செய்திருக்கிறார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், கூட்டணி விவகாரங்கள் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க நயினார் நாகேந்திரன் அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவடைந்து என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைத்துவிட்ட நிலையில், பா.ஜ.க.வின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே பிரதமர் மோடி ஒருமுறை கோவை வந்து சென்ற நிலையில், அடுத்த மாதம் அமித்ஷா வர இருக்கிறார். அமித்ஷா வரும் போது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென நேற்று காலை டெல்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா உள்ளிட்டோரும் அமித்ஷாவை சந்தித்திருக்கின்றனர்.

தற்போது நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றதற்கு பின்னணியில் அமித்ஷா கைகளுக்கு சென்ற ரிப்போர்ட் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று டெல்லி தலைமைக்கு தெரிய வந்துள்ளது.

இதனால் நயினார் நாகேந்திரனை அழைத்து அமித்ஷா விளக்கம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் அ.தி.மு.க. கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரை இணைப்பதில் உள்ள சிக்கல்கள், பா.ஜ.க.வுக்கான தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி வலுவாக உள்ள தொகுதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.