கூடலுார், அக். 15-
கூடலுார் அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்க, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடியாமல் அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். கட்டுமான பணிக்காக இடம் தேடி வருவாய் துறையினர் அலைந்து வருகின்றனர்.
கூடலுார் நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கருநாக்கமுத்தன்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் நேரடியாக கலக்கிறது. ஆற்று நீரை நேரடியாக பம்பிங் செய்து குடிநீராக பயன்படுத்தும் கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தவன்பட்டி, ஆங்கூர்பாளையம், சுருளிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. மக்களுக்கு தொற்றுநோய், உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கலெக்டருக்கு மனு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்தற்கான அனுமதி வழங்கப்பட்டது. முதலில் ஆங்கூர்பாளையம் அருகில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கூடலுார் நகராட்சியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்ட பின் அந்த நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் ஆங்கூர்பாளையம் கவுன்சிலர் பெறப்பட்ட தடை உத்தரவால் பணி துவக்காமல் கைவிடப்பட்டது. அதன்பின் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணி துவங்கியது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் இப்பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணாகியது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் தாமதப்படுத்துவதால் கிராம மக்கள் மீண்டும் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக நகராட்சியில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காந்திகிராமத்தில் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் காந்திகிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் காந்திகிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பதற்கான திட்டத்தை கைவிட்டனர்.
கூடலுார் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களை தேர்வு செய்வவதற்காக அதிகாரிகள் அலைந்து வருகின்றனர். பிரச்னை இல்லாத இடத்தை விரைவாக தேர்வு செய்து கட்டுமான பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது ஆற்றில் நீர் குறைவாக வரும் நிலையில் கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.