ஊட்டி, அக். 15-
தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஊட்டியில் தற்போது இரண்டாம் சீசன் நடைபெற்று வருவதால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள சால்வியா,பேன்சி, அம்ரந்தஸ் போன்ற மலர்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகிறது.
குறிப்பாக, பூங்கா முழுவதிலும் தற்போது சிவப்பு நிறத்தில் பூத்துள்ள சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். பூங்காவிற்குள் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள இந்த சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.
அதேபோல், ஜப்பான் பூங்கா,இத்தாலியன் பூங்கா பகுதிகளிலும் இந்த சால்வியா மலர்கள் அதிகளவு பூத்து காணப்படுகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
மேலும், ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் உள்ள இத்தாலியன் பூங்காவிலும் அனைத்து செடிகளிலும் தற்போது மலர்கள் பூத்துள்ளது. அதேபோல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்வதுடன் அதன் அருகில் என்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.